Never Stop Learning
பத்தொன்பதாம். நூற்றாண்டின் இறுதியில் தோன்றி இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மறைந்தவர் சி. சுப்பிரமணிய பாரதியார். அவரை மகாகவி எனவும் புதுமைக்கவி எனவும் அழைப்பர். முப்பத்தொன்பது ஆண்டுகளே வாழ்ந்தாலும் அவர் புரிந்த சாதனைகளோ பல. மொழி, நாடு, சமுதாயம் பற்றிய எழுச்சிமிகு பாட்டுகளால் மக்களின் இதயங்களைத் தொட்டவர்.
திசை எட்டும் புகழ்கொண்ட எட்டயபுரத்திலே 1882 டிசம்பர்த் திங்கள் 11 ஆம் நாள் சின்னச்சாமிக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாகப்பிறந்தார். சுப்பையா எனச் செல்லமாய் அழைக்கப்பட்டார், சுப்ரமணியன்.
5 வயதிலே அன்னையை இழந்த சுப்ரமணியம், 11 வயதில் எட்டயபுரப் புலவர் அவையில் சோதிக்கப் பெற்றுக் கலைமகள் என்னும் பொருளுடைய பாரதி என்னனும் பட்டப்பெயர் பெற்று ஏற்றம் பெற்றார். 15 வயதில் தந்தையும் மறைய அத்தைக் குப்பம்மாளுடன் காசிக்குச் சென்றார். இந்துக் கலாசாலையில் சமஸ்கிரதம், இந்தி மொழிகளும் கற்றார். பன்மொழி படித்து வேத உபநிடதங்கள் படித்து, ஆங்கிலப் புலமையும் அதிகம் பெற்று, தமிழ்ப்புலமை ஏற்க அழைத்திட, தமிழுக்குத் தன்னையே அளித்தார்.
மொழியைத் தம் விழியாகக் கருதியவர் பாரதியார். நம் அன்னைத் தமிழுக்கு அணிகளைப் பூட்டி மகிழ்ந்தவர் அவர். வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! எனப் பாடினார். யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்! என முழங்கினார்.
தமிழ் நாட்டையும் பாரத நாட்டையும் அவர் பாடும் அழகே அழகு. செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே! என்றார். பாரத நாடு விடுதலை பெற வேண்டும் என்பதே பாரதியின் உயிர் வேட்கை. ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே -ஆனந்த சுதந்தரம் அடைந்து விட்டோமென்று! என்று பாடினார். மொழி, நாடு ஆகிய பற்றுக்கு சற்றும் குறையாத சமுதாயப் பற்றைக் கொண்டிருந்தார் பாரதியார். சாதி,மத வேறுபாடுகள், பெண் அடிமை போன்றவற்றை தன் பாடல் வரிகளால் எதிர்த்தார். ஏழையென்றும் அடிமையென்றும் எவனுமில்லை சாதியில் ! மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொள்ளுத்துவோம் ! ஆகிய வரிகள் பாரதியின் சமுதாயப் பற்றினையும், நம் சமுதாயத்தில் காணப்படும் சகதியும் சேறும் நீங்க வேண்டும் என்பதில் அவருக்கிருந்த ஆர்வத்தையும் வெளிப்படுத்தும் வீர வரிகள்.
பாரதியாரைப் போலவே நாமும் மொழி, நாடு சமுதாயப் பற்றுணர்வுடன் வாழ்வோம்.
நன்றி.
நான் விரும்பும் கவிஞர்- பாரதியார்
குறிப்பு சட்டகம்
முன்னுரை
பிறப்பு
நாட்டுப்பற்று
மொழிப்பற்று
சமூகப்பற்று
முடிவுரை
முன்னுரை
ஆங்கிலேயரின் அடக்குமுறையில் இந்திய மக்கள் அளவில்லா துன்பம் அடைந்தனர். வேதனையில் வாழ்ந்த மக்களிடையே சுதந்திர உணர்வையும், எழுச்சியையும் வீரம் மிகுந்த தன்னுடைய பாடல்களால் ஏற்படுத்திய பாரதியாரே நான் விரும்பும் கவிஞர்
பிறப்பு
மகாகவி பாரதியார் தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டையாபுரத்தில் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி சின்னசாமி- இலக்குமியம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் சுப்பிரமணியன் ஆகும்
நாட்டுப்பற்று
பாரதத் தாயின் அடிமைத்தளையைத் தகர்த்தெறிய இவர் எழுதிய பாடல்கள் இளைஞர்களை வீறு கொண்டு எழச் செய்தது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் மேடைகளிலும் வீதிகளிலும் இவருடைய பாடல்களையே பாடினர்.
"ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா"
என்று மக்களை சுதந்திர போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.
மொழிப்பற்று
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் "
என்று தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துரைத்துள்ளார்.
"செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே "
என்னும் பெருமையோடு கூறியதோடு நில்லாமல்
"சேமமுற -வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!"
என்று ஆணையிட்டார்.
சமூகப்பற்று
சாதிக்கொடுமைகள், பெண் அடிமை, சமூக ஏற்றத்தாழ்வு என்று அனைத்தையும் இந்நாட்டில் இருந்து நீக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவேன்" என்று பெண் உரிமைக்காகப் போராடினார்.
முடிவுரை
வளமான, வலிமையான பாரதத்திற்கு தேவையான சிறந்த வழிகள் யாவும் அவருடைய பாடல்களில் உள்ளன. அவற்றை நாம் பின்பற்றினால் அவர் கனவில் கண்ட பாரதத்தை நாம் நிகழ்காலத்தில் உருவாக்க முடியும்.
பாட்டுக்கொரு புலவன் பாரதியின் புகழ் ஓங்குக!
நான் விரும்பும் கவிஞர்-பாரதியார்
குறிப்பு சட்டகம்
முன்னுரை
பிறப்பும் இளமையும்
இலக்கிய பணி
விடுதலை உணர்வு
தமிழ் பற்று
முடிவுரை
முன்னுரை
"தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று "
என்னும் வள்ளுவரின் வாக்கு ஏற்ப இவ்வுலகில் புகழ் பெற்றவர்கள் சிலர். அவ்வரிசையில் நமது இந்திய நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்காகவும் போராடியவர் சி.சுப்பிரமணிய பாரதியார் ஆவார்.
பிறப்பும் இளமையும்
மகாகவி பாரதியார் தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டையபுரத்தில் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி சின்னசாமி - இலக்குமியம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் சுப்பிரமணியன் ஆகும். இளமையிலேயே 'பாரதி' என்னும் பட்டம் பெற்றார். மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணி புரிந்தார். எட்டையபுர மன்னரின் அரசவைக் கவிஞராக விளங்கினார்.
இலக்கிய பணி
கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் என்னும் முப்பெரும் பாடல்களையும், நாட்டுப்பற்றும் சமுதாய சீர்திருந்த உணர்வும் ஊட்டுகின்ற பாடல்களையும் பாடினார்.
விடுதலை உணர்வு
பாரதியார் வாழ்ந்த காலத்தில் நம் நாடு ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. அப்போது நம் இந்திய மக்களைத் தம் பாடல்களால் விடுதலை உணர்வை ஊட்டி எழுப்பினார்.
தமிழ்பற்று
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி
போல் இனிதாவது எங்கும் காணோம்"
எனப் பாடி தமிழ் மொழியின் பெருமையை உலகம் அறியச் செய்தவர்.
முடிவுரை
முண்டாசுக் கவி, தேசியக் கவி எனப் புகழ்ப்பட்ட பைந்தமிழ்ப் பாவலன் மக்கள் மனதில் விடுதலை உணர்வைத் தூண்டி புதுயுகம் படைத்த தலைவன் 11 09.1921 இல் மறைந்தார். அவரது வழியை நாமும் பின்பற்றி நாட்டுக்கு உழைப்போம்.