Never Stop Learning
முன்னுரை
தமிழக மண்ணில் பிறந்து, வளர்ந்து பெருமை சேர்த்த மாபெருந்தலைவர்கள் பலர். அவர்களுள் பெருந்தலைவர் காமராசரும் ஒருவர். அவரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
பிறப்பு
காமராசர் 15-07-1903 ல் விருதுநகரில் குமாரசாமிக்கும், சிவகாமி அம்மையருக்கும் மகனாகப் பிறந்தார்.
இளமைக் காலம்
காமராசர் திண்ணை பள்ளியில் தமிழ் எழுத்துக்களை கற்று, பின்பு ஓர் ஆண்டு தமிழ்பாடம் கற்றார். தனது ஏழு வயதில் சுவரொட்டியில் 'வந்தேமாதரம் என்று எழுதியிருந்ததைக் கண்டார். அந்த வார்த்தை அவரது மனதில் ஆழமாக பதிந்து விட்டது.
கல்விப்பணி
காமராசர் காலத்தில் கட்டாயக் கல்வி நடைமுறைபடுத்தப்பட்டது. தெரு தோறும் தொடக்கப்பள்ளிகளும் ஊர்தோறும் உயர்நிலைப் பள்ளிகளும் தொடங்குவதே அவரது நோக்கமாக இருந்தது. மதிய உணவுத் திட்டத்தையும் தொடங்கினார்.
நிறைவேற்றிய பிற திட்டங்கள்
மின் திட்டங்கள் அதிகப்படுத்தினார். சாலைகள் பல போடப்பட்டன. பாசனம் வசதிகள் செய்யப்பட்ட அணைகள் பல கட்டினார். நெய்வேலி சுரங்கத் தொழிற்சாலை முதல் மேட்டூர் காகித தொழிற்சாலை வரை பல திட்டங்களை தொடங்கினார்.
முடிவுரை
ஏழைப்பங்காளர், கருப்பு காந்தி, பெருந்தலைவர் என பல பெயர்கள் பெற்றார். இவரை கல்விகண் திறந்தவர் என தமிழகம் போற்றுகிறது.
காமராஜர்
குறிப்பு சட்டகம்
முன்னுரை
இளமைக்காலம்
காமராஜரின் கல்விப்பணிகள்
நிறைவேற்றிய பிற திட்டங்கள்
முடிவுரை
முன்னுரை
பெருந்தலைவர், படிக்காத மேதை, கர்மவீரர் , கருப்புக் காந்தி என்றெல்லாம் மக்களால் போற்றப்படுபவர் காமராஜர். காமராஜரின் இளமைக்காலம், கல்விப்பணி, தொண்டுகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
இளமைக்காலம்
தென் தமிழ் நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் தந்தை குமாரசாமி, தாயார் சிவகாமி அம்மாள் ஆகியோருக்கு மகனாக 1903 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் நாள் பிறந்தார் காமராஜர் சிறு வயதிலேயே தந்தையைப் பறிகொடுத்த காமராஜர் பள்ளி படிப்பை தொடர முடியாமல் வேலைக்கு சென்றார். காமராஜர் பத்திரிக்கைகள் படித்தும் கூட்டங்கள் நடைபெறும் இடங்களுக்குச் சென்றும் அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். உப்புச் சத்தியாக்கிரகம், சட்டமறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் எனப் பல போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைப்பட்டார்.
காமராஜரின் கல்விப்பணிகள்
காமராஜர் 1954 இல் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார். அப்போது மூடப்பட்டு இருந்த தொடக்கப்பள்ளிகள் அனைத்தையும் உடனடியாகத் திறக்க ஆணையிட்டார். மாநிலம் முழுக்க அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி, பசியின்றிப் படிக்க மதிய உணவுத் திட்டம், இலவச சீருடை திட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தினார். தமிழ்நாட்டில் பல கிளை நூலகங்களைத் தொடங்கினார். மாணவர் உயர் கல்வி பெற பொறியியல் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள், ஆசிரியப் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றைத் தொடங்கினார்.
நிறைவேற்றிய பிறதிட்டங்கள்
காமராஜர் ஒன்பது ஆண்டுகாலம் முதலமைச்சராய் இருந்தார். சென்னை துறைமுக விரிவாக்கம், நெய்வேலி நிலக்கரித் திட்டம், நீலகிரித் திரைப்படச் சுருள் தொழிற்சாலை, ஆவடி ரயில்வே வாகனத் தொழிற்சாலை, மேட்டூர் காகித தொழிற்சாலை, கிண்டி தொழிற்சாலை, குந்தா மின்திட்டம் முதவிய பல அவரது ஆட்சிக் காலத்தில் செயற்பாட்டுக்கு வந்தன.
முடிவுரை
அரசியல்வாதி எப்படி வாழ வேண்டும் என்பதற்கு முன் மாதிரியாக வாழ்ந்த காமராசர் 1975 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் நாள் மறைந்தார். இவரது பிறந்தநாளில் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
அனைவருக்கும் வணக்கம். கல்வி தந்தை, ஏழை பங்காளர், படிக்காத மேதை, தென்னாட்டுக் காந்தி, கருமவீரர், கிங்மேக்கர் என்றெல்லாம் அழைக்கபட்ட பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளை கொண்டாட இங்கு நாம் கூடியுள்ளோம்m இவரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி தினமாகத் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.
கட்டாயக் கல்வி, இலவச மதிய உணவுத் திட்டம், சீருடைத் திட்டம் போன்ற திட்டத்தால் கல்வி துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர் காமராசர் என்று அனைவரும் அறிந்ததே. இங்கு அவர் வேளாண் வளர்ச்சிக்காக செய்த பணிகளைப் பற்றி பேச எனக்கு வாய்ப்பு கிடைத்ததில் நான் பெருமிதம் கொள்கிறேன்.
ஏழைக் குடும்பத்தில் பிறந்து தன்னிகரில்லாத தலைவராக உயர்ந்த காமராசர் அவர்கள் 1903 ஆம் ஆண்டு சூலை 15 ஆம் நாள் குமாரசுவாமி மற்றும் சிவகாமி அம்மாளுக்கு மகனாக விருதுநகரில் பிறந்தார்.
பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மண்
இந்த திருக்குறளுக்கு சான்றாக தனக்கென வாழாமல் பிறருக்காக வாழ்ந்தவர் காமராசர் அவர்கள். சிறு வயதிலேயே நாட்டு விடுதலைக்காகப் போராடினார். 8 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். நாட்டுப்பற்றுக் கொண்ட காமராசர் வீட்டுப்பற்று ஏற்பட்டால் நாட்டுக்காக உழைத்திட முடியாது என்று அஞ்சி திருமணம் செய்யாமல் தன் வாழ்க்கையை நாட்டுக்காக அர்ப்பணித்தார்.
மக்களின் நலன் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு ஆட்சி நடத்தினார், காமராசர். அதனால் இவர் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்த ஒன்பது ஆண்டுகளும் தமிழகத்தின் பொற்காலம் என்று கூறுவதுண்டு. ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படைத் தேவைகள் கிட்ட வேண்டுமெனப் பாடுபட்டார்.
விவசாயம் என்பது நமது பாரம்பரியமான தொழில். மனித குலத்திற்கே உயிர்நாடியான தொழில். விவசாயம் தழைத்தால் தான் மக்கள் பசியின்றி வாழ முடியும் என்று அறிந்தவர் காமராசர். அவர் ஆட்சி செய்த தமிழகத்தில் விவசாய நிலங்களுக்கு பஞ்சமில்லை. விவசாய உற்பத்தியை அதிகரிக்க நீர்ப்பாசனங்கள் முக்கியமானவை என்று அறிந்த காமராசர் அதற்கான திட்டங்களைச் செயல்படுத்தினார். அதன் விளைவாக கிடைத்ததுதான் வைகை அணை, அமராவதி அணை, மணிமுத்தாறு அணை, சாகர் அணை என பல அணைகள்.
காமராசரால் அமைக்கப்பட்டு 60 ஆண்டுகள் மேல் கடந்து கம்பீரமாக நிற்கும் அணைகளால் தமிழ்நாட்டில் இன்றும் வேளாண் வளர்ச்சிக்கு உதவுகிறது. பெரிய பெரிய அணைகள் மட்டும் கட்டாமல் உள்ளூர் சிறு நதிகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் போன்றவற்றை எல்லாம் சீர்படுத்தி, மேம்படுத்தி விவசாயத்தைக் காப்பாற்றினார்.
ஒரு நாட்டில் கிராமங்கள் வளர்ச்சி அடைந்தால் தான் அந்நாடு வளம்பெறும் என்ற காந்தியடிகளின் கூற்றை மேற்கொண்ட காமராசர். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்த வேண்டும் என்றால் வேளாண் துறையில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் கிராமங்களை வளர்ச்சி அடையச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்.
கிராமங்கள் தோறும் சாலைகள், மின்சாரம், போக்குவரத்து போன்ற உள்கட்டமைப்பை மேம்படுத்தினார். இதன் மூலம் விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை சந்தைக்கு எடுத்து செல்ல முடிந்தது. காமராசர் காலத்தில் பல தொழிற்சாலைகள் திறக்கப்பட்டன. விவசாயிகள். தங்கள் வேளாண் பொருட்களை தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களாக விற்றனர். இதன் மூலம் வேளாண் துறையும் வளர்ச்சி அடைந்தது. தமிழ்நாட்டின் பொருளாதாரமும் உயர்ந்தது.
காமராசர் காலமானபோது அவரது சட்டைப் பையில் 100 ரூபாய்க்கும் குறைவாக பணம் இருந்தது. ஆனால் அவர் தனது முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியபோது மாநிலக் கருவூலத்தில் கோடிக்கணக்கான பணத்தை விட்டுச் சென்றார். அவர் பணத்தை மட்டும் விட்டு செல்லவில்லை அவர் ஆற்றிய பணிகள் மற்றும் திட்டங்கள் இன்றும் நிலைத்து நின்று மக்களுக்கு பயன் அளிக்கிறது. காலன் அவரைக் கொண்டு சென்றாலும் காலங்கள் கடந்து அவர் புகழ் ஓங்கி நிற்கும் என்பதில் ஐயமில்லை. வாய்ப்பளித்த அவைக்கு நன்றி!