Never Stop Learning
ஜவஹர்லால் நேரு | Jawarharlal Nehru
(Click the heading to learn to read)
முன்னுரை
"குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று" என்ற வரிகள் குழந்தைகளின் பண்பைக் குறிக்கிறது. அப்படிபட்ட குழந்தைகளைக் கொண்டாடப்படும் நாளான குழந்தைகள் தினத்தைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
நேருவும் குழந்தைகளும்
முன்னாள் பிரதமர் நேரு அவர்கள் குழந்தைகள் மீது அதிக அக்கறையும், அன்பும் கொண்டவர். குழந்தை வளர்ச்சியில் அதிக ஈடுபாடு கொண்டவர். குழந்தைகள் அவரை நேரு மாமா என்று அன்புடன் அழைப்பார்கள். எனவே அவருடைய பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் நாள் குழந்தைகள் தினமாக கொண்டாப்படுகிறது.
வருங்கால இந்தியா
குழந்தைகள் தினத்தை நாம் அனைவரும் கொண்டாடுவதற்கு முக்கிய நோக்கம் சிறந்த கல்வி, சிறந்த வாழ்வாதாரம் குழந்தைகளுக்கு அடிப்படை உரிமைகள் கிடைக்க செய்வதே ஆகும்.
எதிர்கால சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் ஆற்றல் பெற்றவர்கள் குழந்தைகள். எனவே நாட்டின் அதிகாரிகளும் குழந்தைகளது பெற்றோர்களும் குழந்தைகளை பாதுகாத்து அவர்களை சிறப்பான நிலைக்கு கொண்டு வரவேண்டும்.
"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது" என்ற பழமொழிக்கு ஏற்றார் போன்று, குழந்தைகளுக்கு நல்ல கருத்துகளை எடுத்து சொல்லி வளர்க்க வேண்டும்.
மனதில் கள்ளம் கபடமற்ற இந்த குழந்தைகளுக்காக உலகம் முழுவதும் சர்வதேச குழந்தைகள் தினம் நவம்பர் 20 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
நம் கடமை
குழந்தைகளுக்கு எதிராக பெண்சிசுக் கொலை, குழந்தைகளை தொழிலாளர்களாக பயன்படுத்துவது, குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது, பாலியல் கொடுமை, கடத்தல் எனப் பல வகையான குற்றங்கள் அரங்கேறி வருகின்றன. இவற்றை எல்லாம் தடுத்து அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அப்பொழுது தான் உண்மையான குழந்தைகள் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியும்.
முடிவுரை
"தேசத்தின் சொத்தானது களஞ்சியத்தில் இல்லை கல்வி பயிலும் பள்ளிகளில் இருக்கிறது" என்றார் நேரு. அப்படிப்பட்ட செல்வங்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுப்போம்.
நன்றி!
முன்னுரை
இந்தியாவின் ஒளிவிளக்காகத் திகழ்ந்த மாந்தருள் மாணிக்கமான ஜவஹர்லால் நேரு பிறந்த நாளைக் குழந்தைகள் தினமாக நாம் கொண்டாடுகிறோம். இவ்விழா பாரத நாடெங்கும் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது.
நேருவும் குழந்தைகளும்
நேரு அவர்கள் குழந்தைகள் மீது பேரன்பு கொண்டிருந்தார். இதனை உணர்த்தும் வகையில் தன் பிறந்த நாளாகிய நவம்பர் 14ம் தேதியைக் குழந்தைகள் நாளாக் கொண்டாடச் செய்தார். குழந்தைகளும் அவரை அன்புடன் "நேரு மாமா" என்று அழைப்பார்கள்.
விழாக் கொண்டாட்டம்
பள்ளிகளில் தேசியக் கொடி ஏற்றி விழாவைக் கொண்டாடுவார்கள். விழாவிற்குத் தலைமை தாங்குதல், சொற்பொழிவாற்றுதல், கலை நிகழ்ச்சிகள் நடத்துதல் முதலியன மாணவர்கள் மேற்பார்வையிலேயே நடைபெறும். இதனால் மாணவர்களுக்கு இளம்வயதிலேயே செயலாற்றுட திறமை வளரும்.
சிறப்பு
பாரத ரத்தினம் நேரு பெருமானின்அறிவையும் ஆற்றலையும் நாட்டுத் தொண்டையும் பற்றி அறிய நல்ல வாய்ப்பாக இவ்விழா அமைகிறது. நேருவைப் போல் நாமும் வாழ வேண்டும். சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். நாட்டுக்காக உழைக்க வேண்டும், நம் கடமைகளைப் பொறுப்பாக செய்ய வேண்டும் போன்ற எண்ணங்கள் மாணவர்கள் இதயத்தில் பசுமரத்தாணிப் போல் பதிய இவ்விழா தூண்டுகோலாய் அமைகிறது.
முடிவுரை
மாணவர்களிடையே நாட்டுப் பற்று, மொழிப்பற்று, தியாகம், அடக்கம், ஒழுக்கம் முதலிய பண்புகள் வளர்கின்றன. எனவே, நாம் இத்தகைய விழாக்களை ஒவ்வோராண்டும் கொண்டாடிப் பயன்பெற வேண்டும்.


நேரு பற்றி 10 வரிகள்:-
1. ஜவகர்லால் நேரு 1889 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அலகாபாத்தில் பிறந்தார்.
2. நேருவின் தந்தை மோதிலால் நேரு, தாயார் சொரூபராணி அம்மையார்.
3. 1912-ல் லண்டனில் சட்டம் பயின்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார்.
4. நேருவின் மனைவி கமலா நேரு. இவர்களுக்கு இந்திராபிரியதர்ஷினி (இந்திரா காந்தி] என்ற மகள் பிறந்தார்.
5. 1919ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம், நேருவை சுதந்திர பேராட்டத்தில் ஈடுபட வழிவகுத்தது எனலாம்.
6. நேரு சுதந்திர போராட்டத்தின் போது பல முறை சிறையில் அடைக்கப்பட்டார். நேரு சிறையில் இருந்த நாட்களில் ஒரு சில நூல்களை எழுதினார். "இந்தியாவின் கண்டுபிடிப்பு", அவர் படைப்புகளில் சிறந்தது.
7. இந்தியாவின் முதல் பிரதமர் என்ற பெருமை இவரையே சேரும்.
8. இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர். குழந்தைகள் அனைவரும் இவரை செல்லமாக "நேரு மாமா" என்று அழைப்பார்கள்.
9. இந்தியாவின் ஆபரணம், ரோஜாவின் ராஜா, ஆசிய ஜோதி, சமாதானப் புறா போன்ற சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
10. 1964 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதி நேரு அவர்கள் மரணம் அடைந்தார்.
நன்றி!


அனைவருக்கும் வணக்கம்.
நான் தான் நம் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு
நான் அலகாபாத்தில் பிறந்தேன்.
என் தந்தை பெயர் மோதிலால் நேரு, தாயாரின் பெயர் சொரூபராணி.
நான் லண்டனில் சட்டம் பயின்று பாரிஸ்டர் பட்டம் பெற்றேன்.
எனது பிறந்தநாளான இன்று குழந்தைகள் தினம் கொண்டாடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
எனக்கு குழந்தைகளுடன் நேரம் கழிப்பது மிகவும் பிடிக்கும்.
குழந்தைகள் என்னை அன்புடன் நேரு மாமா என்று அழைப்பார்கள்.
ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவமே என்னை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வழிவகுத்தது.
நம் நாட்டின் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த பல முயற்சிகள் எடுத்துள்ளேன்.
நேரு மாமா என்ற முறையில் நான் சொல்வதை கேளுங்கள் செல்லங்களே! நீங்கள் தான் இந்தியாவின் எதிர்காலம் அதனால் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும், பெரிய கனவுகள் காண வேண்டும்,ஒற்றுமையாக வாழ வேண்டும். ஜெய் ஹிந்த்!
என்னை போன்ற குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக வடிவமைக்க எப்போதும் துணையாக இருக்கும் எங்கள் பள்ளி முதல்வருக்கும் ஆசிரியர்களுக்கும் மற்றும் இங்கு கூடியுள்ள என் நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கங்கள் மற்றும் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்.
ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் இருந்து போராடி வெற்றி பெற்ற இந்திய தேசமானது சுதந்திரமடைந்த வேளையில் பாரத பிரதமர் நேரு தனது கனவு இந்தியா குழந்தைகளின் கையிலே தங்கியிருக்கிறது என்பதை நன்கறிந்து அவர்களோடு நேரம் செலவிடுவதில் அதிக விருப்பம் காட்டினார். எனவே நவம்பர் 14 ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கடைப்பிடிப்பதை நிறுத்திவிட்டு, அந்த நாளை குழந்தைகள் தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறித்தினார். இன்று நம்முடைய நாள், நம்மை பற்றி அனைவரும் சிந்திக்கவும், நாம் நம்மை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லவும் நம்மை பக்குவபடுத்தும் நாள்.
நம் நாட்டின் தலைவர்கள், விஞ்ஞானிகள், அறிஞர்கள் மற்றும் பல சாதனையாளர்கள் தங்கள் குழந்தை பருவத்தில் இருந்தே முறையான கல்வி, ஒழுக்கம், பண்பாடு, முயற்சி மற்றும் ஆரோக்கியம் பின்பற்றி வந்ததால் அவர்களால் வெற்றியை அடைய முடிந்தது. குழந்தை பருவம் மனிதனின் வாழ்க்கையின் பொற்காலம் என்று கூறலாம்.
"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது", என்பார்கள். ஆகையால் குழந்தை பருவத்திலேயே நம் திறன்களை வளர்த்துக் கொண்டால் நமது எதிர்காலம் சிறப்பாக அமையும்.
கல்வி, குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. கல்வி இல்லாமல் குழந்தைகள் அவர்களின் முழுதிறனை வெளிப்படுத்த முடியாது. கற்றலுடன் பாதுகாப்பும் ஆரோக்கியமும் எல்லா குழந்தைகளுக்கும் அவசியமானது.
குழந்தைகளுக்கு கற்பனை திறன் அதிகம். அவர்கள் தங்களுக்கு வரும் வாய்ப்புகளையும் சவால்களையும் உற்சாகமாக சந்திப்பார்கள். குழந்தைகளால் சூழ்நிலைக்கும் மாற்றத்திற்கும் ஏற்ப தங்களால் எளிதில் மாற்றிக்கொள்ள முடியும். குழந்தைகள் எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் உதவியாக இருப்பார்கள். அத்தகைய குழந்தைகள் நாட்டின் வருங்கால குடிமக்கள். அவர்களே நாட்டின் எதிர்காலம் . குழந்தைகளாகிய நாம் சரியான முறையில் வளரவில்லை என்றால் நம் எதிர்காலம் மட்டுமல்லாமல் நாட்டின் எதிர்காலமே பாழாகிவிடும்.
இந்தியாவின் சொத்துகளாகிய நாம் தான் நமது தேசத்தின் நலனை தீர்மானிக்கபோகிறோம். ஆகையால் இன்றிலிருந்து நம் எதிர்காலத்தையும் இந்தியாவின் எதிர்காலத்தையும் வடிவமைக்க நல்ல முறையில் உழைப்போம். நமக்கு கிடைத்த கல்வி மற்றும் எல்லா வசதிகளையும் பயன்படுத்தி நல்ல முன்னேற்றத்தை உருவாக்குவோம். கல்வி, தொழில்நுட்பம், அறிவியல் துறையில் மட்டும் இந்தியாவை வெற்றி அபைய செய்யாமல் இந்தியாவின் முது கெலும்பான விவசாயத்திலும் வல்லரசு நாடாக மாற்றுவோம் என்று உறுதி எடுப்போம் ! ஜெய் ஹிந்த்! நன்றி!