Never Stop Learning
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
(Click the heading to learn to read)
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
முன்னுரை
"ஒருவனுக்கு ஒருவேளை உணவு கொடுப்பதை விட, அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுத்தால், அவன் காலமெல்லாம் பசியில்லாதிருப்பான்" என்ற சீனப் பொன்மொழி கைத்தொழிலின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. அப்படிபட்ட கைத்தொழிலின் முக்கியத்தைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
கைத்தொழில்
எளிய மூலப்பொருட்களைக் கொண்டு ஒருவரின் செய்திறனை ஆதாரமாகக் கொண்டு ஆக்கப்படும் பொருட்களை கைத்தொழில் உற்பத்திகள் எனலாம்.
எண்ணில்லாத கைத்தொழில்கள்
பாய் பின்னுதல், கூடை பின்னுதல், நெசவு, கைவினைப் பொருட்கள் செய்தல், தேனீ வளர்த்தல், மண்பாண்டம் செய்தல், மின்னணு சாதனங்கள் பழுது பார்த்தல், மெழுகுப் பொருட்கள் தயாரித்தல் போன்ற எண்ணற்ற கைத்தொழில்கள் உள்ளன.
கைத்தொழிலின் அவசியம்
பெற்றோர் தாங்கள் பிள்ளைகள் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே ஏதேனும் கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும்.
"ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது" என்பதைப் போல வெறும் புத்தகப் படிப்பு வாழ்க்கைக்கு உதவாது, ஒவ்வொருவரும் ஒரு கைத்தொழிலை தெரிந்து வைத்திருப்பது அவசியமான ஒன்று.
கைத்தொழிலின் சிறப்பு
கைத்தொழில் நம் மரபு, பண்பாடு சார்ந்த தொழில்களாகும். மனித வாழ்வுக்குத் தேவையான அனைத்து அடிப்படைப் பொருள்களும் கைத்தொழில் மூலமாக உற்பத்தி செய்ய முடியும்.
கைத்தொழில் பலருக்கு வேலை தருகிறது, சுற்றுச்சூழல் நண்பனாகத் திகழ்கிறது. நாம் விரும்பும் நேரத்தில், ஓய்வு நேரத்தில் கைத் தொழிலில் ஈடுபடலாம். மனத்திற்குப் பிடித்த கைத்தொழில் ஒன்றில் ஈடுபடும் போது நம் மனம் நிறைவு கொள்கிறது. சிந்தனை விரிவடைகிறது, கவலைகள் மறக்கப்படுகின்றன.
முடிவுரை
வறுமையின் பிடியில் வாடுபவர்களைக் கூட கைத்தொழில் என்றும் கைவிட்டதில்லை. தனி நபர் பொருளாதார வளர்ச்சி மட்டும் அல்லாமல் கைத்தொழிலால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் பெருகும். எனவே, கைத்தொழிலின் அருமையை அனைவரும் உணர்ந்து, ஏதேனும் ஒரு கைத்தொழிலைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
நன்றி!
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
குறிப்பு சட்டகம்
முன்னுரை
வேலைவாய்ப்பு
தொழில் வகைகள்
அரசின் உதவி
பயன்கள்
முடிவுரை
முன்னுரை
"கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்" என்றார் நாமக்கல் கவிஞர். நாம் தொழில் ஒன்றைக் கற்றுக்கொண்டால் வெளியே வேலை தேடி அலைய வேண்டிய அவசியமில்லை.
வேலை வாய்ப்பு
இன்று படித்துவிட்டு வேலை கிடைக்காமல் திண்டாடுவோர் பலர் உள்ளனர். அவர்கள் அனைவரும் வேலை கிடைக்காமல் வாய்ப்பை மட்டுமே எதிர்பார்த்து காத்திருந்தால் ஏமாற்றமே கிட்டும். ஏதாவது ஒரு கைத்தொழிலை கற்றுக்கொண்டு விட்டால், வேலைவாய்ப்பு கிடைக்கவில்லையே என்று வருந்தி நிற்காமல், தொழில் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு வீட்டிலேயே தொழில் செய்து வருவாய் பெற முடியும்.
தொழில் வகைகள்
முறுக்கு, அதிரசம் போன்ற திண்பண்டங்கள் செய்து விற்பனை செய்தல், கூடை பின்னுதல், மெழுகுவர்த்தி தயாரித்தல் பக்தி தயாரித்தல், மண்புழு உரம் தயாரித்தல் போன்ற கைத்தொழில்களை செய்து பொருளிட்டலாம்.
அரசின் உதவி
கைத்தொழில்களையும், சிறுதொழில்களையும் ஊக்கப்படுத்தும் நோக்கில் அரசு பல சலுகைகளை வழங்கி வருகிறது. அரசு மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கி, கைத்தொழில் வாய்ப்புக்கு நிதி உதவி தந்து ஊக்குவித்து வருகிறது.
பயன்கள்
ஒரு கைத்தொழிலைக் கற்றுக்கொண்டு நாம் தொழில் செய்யத் தொடங்கிவிட்டால் வேலை இல்லாத் திண்டாட்டத்தைப் போக்க முடியும். சொந்தமாய் தொழில் செய்யத் தொடங்கினால் தன்னம்பிக்கையுடன் வாழ முடியும்.
முடிவுரை
"செய்யும் தொழிலே தெய்வம் அந்த திறமை தான் நமது செல்வம்" என்னும் பாடலுக்கு ஏற்ப ஏதேனும் ஒரு கைத்தொழிலைக் கற்று வாழ்க்கையை வளம் பெற செய்வோம்.


உழைப்பே உயர்வு
குறிப்பு சட்டகம்
முன்னுரை
உழைப்பின் வகைகள்
உடல்சார்ந்த உழைப்பு
அறிவு சார்ந்த உழைப்பு
உழைப்பில் சலைப்பில்லை
முடிவுரை
முன்னுரை
"உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?" என்றார் பட்டினத்தார். உழைப்பில்லை எனில் இவ்வுலகம் இயங்காது. ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கு அவனது உழைப்பே காரணம். எனவே "உழைப்பின் உயர்வு" பற்றியும் அதன் சிறப்பு பற்றியும் இக்கட்டுரையில் காண்போம்.
உழைப்பின் வகைகள்
உடல் சார்ந்த உழைப்பு, அறிவு சார்ந்த உழைப்பு என உழைப்பு இருவகைப்படும். ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு இவ்விரு உழைப்புகளுமே தேவை. ஐம்புலன்களைப் பயன்படுத்தியும், அறிவைப் பயன்படுத்தியும் வாழ்க்கைக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை நாம் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
உடல் சார்ந்த உழைப்பு
மக்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பல பொருட்கள் உடல் உழைப்பு மூலம் பெற முடியும். உழவு, நெசவு, வணிகம், கட்டிடக்கலை, கைத்தொழில் என்பன அவற்றுள் அடங்கும்.
அறிவு சார்ந்த உழைப்பு
கணினி, ரோபோ இயந்திரங்கள் போன்றவைகள் மனிதனின் இடைவிடாத அறிவு சார்ந்த உழைப்பால் உண்டானவை. பள்ளிகள், நீதிமன்றங்கள், பல்வேறு அலுவலகங்கள் போன்றவை அறிவு சார்ந்த உழைப்பின் காரணமாகவே இயங்குகின்றன.
உழைப்பில் சலைப்பில்லை
ஆறு அறிவு படைத்த மனிதனுைக்கு மட்டும் உழைப்பு சொந்தம் இல்லை. விலங்குகள், பறவைகள், பூச்சிகள், செடி கொடிகள் கூடத் தமது இடைவிடாத முயற்சியால் உழைப்பின் மூலமே முன்னேற்றம் காண்கிறது.
முடிவுரை
"முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்"
என்னும் வள்ளுவரின் வாக்கிற்கேற்ப நாம் எந்த செயலையும் இடைவிடாத உழைப்பு கொண்டு முன்னேற வேண்டும்.
முன்னுரை
"காற்றுள்ள போதே தூற்றிக் கொள் "என்கிறது பழமொழி ஒன்று. எந்த ஒரு செயலையும் காலத்தே செய்ய வேண்டும் என்பதற்காகக் கூறப்பட்டதே அது. காலந்தின் அருமையை மக்கள் உணர வேண்டும். முதுமையில் தளர்ச்சி, தள்ளாமை அனைத்தும் மனிதர்க்கு வந்துவிடும். அதனால் இளமைப் பருவத்தில் காலத்தை வீணாக்குதல் கூடாது.
பருவத்தே பயிர்செய்
இளமைப் பருவம் கல்விக்கு உரியது. அப்பருவத்தை யாரும் வீண் செய்தல் கூடாது. "ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது", காலத்தை தவறவிட்டு பின் வருந்தக் கூடாது. இளமையில் கல் ; பருவத்தே பயிர்செய் போன்ற பழமொழிகளை மாணவர்கள் தங்கள் மனதில் நன்றாக பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
காலம் மீண்டும் வராது
"அழுது புரண்டாலும் அணைதாண்டிய வெள்ளம் மீண்டு வராது" என்ற பழமொழியைப் போல தவறவிட்ட காலமும் மீண்டும் வராது. இதனை மனதிற்கொண்டு அதைப் பயன்படுத்த வேண்டும். சாதனையாளராகத் திகழ்ந்தவர்களெல்லாம். காலத்தை சிறப்பாகப் பயன்படுத்தியவர்களே. ஓட்டப்பந்தய வீரன் ஒரு நொடியைத் தவறவிட்டாலும் தங்கப்பதகத்தை இழக்க நேரிடும். சில வினாடிகள்தானே என்று கூட அலட்சியம் செய்யாமல் காலத்தில் காரியம் ஆற்ற வேண்டும்.
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு என்ற பெயரில் அருமையான காலத்தை தேவையற்ற காரியங்களில் வீணாக்கக் கூடாது. வெறுமனே அரட்டையடித்துக் கொண்டிருத்தல், உறங்குதல், சூதாடுதல், தொலைக்காட்சி கண்டுகளித்தல், இணையத்தில் வீணாக நேரம் கழித்தல் போன்றவற்றில் ஈடுபடக்கூடாது. நல்ல நூல்களை படித்தல், ஏதேனும் கைத்தொழிலில் ஈடுபடுத்தி காலத்தை பயனுள்ள வகையில் செலவு செய்ய வேண்டும்.
முடிவுரை
ஒருவன் ஏழையாகப் பிறக்கலாம். ஒருவன் செல்வந்தனாகப் பிறக்கலாம். ஆனால் காலம் மட்டும் எல்லோருக்கும் பொதுவாகத் திகழ்கிறது. பூமி சுற்றச் சுற்ற நாட்களும் நகர்கிறது. நிற்காது சுழலும் பூமியைப் போல் நாமும் காலத்தின் அருமையை உணர்ந்து உழைப்போமாக!
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
குறிப்பு சட்டகம்
முன்னுரை
நோய்வரக் காரணங்கள்
வருமுன் காத்தல்
உணவும் மருந்தும்
உடற்பயிற்சியின் தேவை
முடிவுரை
முன்னுரை
உடல் நலம் போனால் உயிர்ப்பறவை போய்விடும் அதனால் தான் "உடம்பார் அழியின் உயிரார் அழிவர்", என்பார் திருமூலர் இவ்வுலகில் நீண்டநாள் வாழ உடல் நலம் பேணல் வேண்டும்.
நோய்வரக் காரணங்கள்
இன்றைய வாழ்க்கைச் சூழலில் ஓய்வின்மை, காலம் தவறிய உணவு, உணவு பழக்க வழக்க மாற்றம் உடற்பயிற்சியின்மை உள்ளிட்டவையே பல்வேறு உடல் நலப் பாதிப்புகளுக்கு மூல காரணமாகின்றன.
வருமுன் காத்தல்
சரியான உணவு, சரியான உடற்பயிற்சி, சரியான தூக்கம் ஆகிய மூன்றும் நம்மை நலமாக வாழவைக்கும். எளிமையாகக் கிடைக்கக் கூடிய காய்கறிகள், கீரைகள் ,பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வருமுன் காக்கும் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.
உணவும் மருந்தும்
ஒருவர் உட்கொள்ளும் உணவில் புரதம், கொழுப்பு, மாவுச் சத்து, கனிமங்கள் சேர்ந்ததே சமச்சீர் உணவு. எனவே அளவறிந்து உண்ண வேண்டும் உணவை நன்றாக மென்று விழுங்குதல் வேண்டும். இப்படி உண்டால் உணவே மருந்தாகும்.
உடற்பயிற்சியின் தேவை
"ஓடி விளையாடு", "மாலை முழுவதும். விளையாட்டு" என்பன உடலினை உறுதி செய்ய பாரதி கூறும் வழிமுறைகள். அதனால் நடைப்பயிற்சி, நீச்சல், ஓட்டம் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளல் வேண்டும்.
முடிவுரை
இறைவன் வழங்கிய அருட்கொடையே நமது உடல். அதனைக் காப்பது நம் முதற்கடமை . சுவரை வைத்தே சித்திரம் வரைய முடியும்.
உடலைப் பேணுவோம்! உயிரைக் காப்போம்!
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
குறிப்பு சட்டகம்
முன்னுரை
நோய் வரக் காரணங்கள்
நோய் தீர்க்கும் வழிமுறைகள்
வருமுன் காத்தல்
உணவும் மருந்தும்
உடற்பயிற்சியின் தேவை
முடிவுரை
முன்னுரை
நாம் இவ்வுலகில் நீண்டகாலம் வாழ்வதற்கு ஆதாரமாக உள்ளது நமது உடலாகும். 'சுவரை வைத்துதான் சித்திரம் வரைய முடியும்", எனவே உடல் ஆரோக்கியமே அனைத்துச் செயல்களும் நடைபெறக் காரணமாக உள்ளது. ஆகையால் நாம் உடலையும் உயிரையும் பாதுகாத்தல் அவசியம்.
நோய் வரக் காரணங்கள்
சுற்றுச்சூழல் மாசு, மாசுபட்ட காற்று மற்றும் நீர் அளவுக்கு அதிகமாக உண்ணுதல், சுகாதாரமற்ற நிலை, மன அழுத்தம், இரவு தூங்காமல் கண் விழித்தல், ஓய்வில்லாமல் அதிக வேலை செய்தல், உடல் பயிற்சி மேற்கொள்ளாதிருத்தல் இவைகளே நோய் வரக் காரணங்களாகும்.
நோய் தீர்க்கும் வழிமுறைகள்
தினமும் நாற்பது நிமிடம் நடைப்பயணம் மேற்கொள்ள வேண்டும். யோகா, மூச்சுப்பயிற்சி, தியானம் என்று ஏதாவது ஒன்றில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். தினமும் ஏழு மணி நேரம் தூக்கம், மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துதல், ஆரோக்கியமான உணவு உண்ணுதல் ஆகியவை நோய் தீர்க்கும் வழிமுறைகள் ஆகும்.
வருமுன் காத்தல்
நோய் வந்த பின்பு தடுத்தல் என்பதை விட வருமுன் காத்தல் என்பதே சிறந்தது. உடலுக்கு ஒவ்வாத உணவு தவிர்த்தும், நல்ல பழக்கவழக்கங்கள், சுத்தம், ஒழுக்க நெறிகள் முதலியவற்றைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் எந்த நோயும் நம்மை அண்டாது.
உணவும் மருந்தும்
செயற்கை உணவை ஒழித்து, இயற்கை உணவை உண்ண வேண்டும். உணவையே மருந்துபோல் உண்டால் எந்தவித நோயும் வராது. அனைத்து சுவையுடைய பொருளையும் அளவாக உண்ண வேண்டும்.
உடற்பயிற்சியின் தேவை
" உடம்பார் அழியில் உயிரார் அழிவர்" என்றார் திருமூலர். குழந்தைகளும் பெரியவர்களும் தினமும் உடற்பயிற்சி மற்றும் ஓடியாடி விளையாட வேண்டும். இதன் மூலம் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும், இரத்தவோட்டம் சீராகம், உறுப்புகள் வலிமை பெறும்.
முடிவுரை
இறைவனின் படைப்பாகிய நாம் நமது உடலைப் பேணி காத்து நோய் வராமல் பாதுகாக்க வேண்டும்.
உடலை வளர்ப்போம் ! உயிரைப் பேணுவோம்!