Never Stop Learning
பேரிடர் மேலாண்மை
[ஆழிப் பேரலை]
முன்னுரை:-
2004 டிசம்பர் 26 ஆம் நாள் நமது இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு தினம். ஒரு சில மணிநேரத்திற்குள் யாரும் எதிர்பாராத நிலையில் கடல் தாய் ஆயிரக்கணக்கான உயிர்களைக் குடித்துவிட்டாள். இத்தகைய கொடுமை மேலும் நிகழா வண்ணம் இருக்க அவ்வாழிப் பேரலை [சுனாமி] பற்றி நாம் அறிந்திருத்தல் வேண்டும்.
சங்க காலத்தில்:-
பண்டைக்காலத்தில் குமரி எல்லையில் ஆழிப் பேரலை அழிவு நிகழ்ந்ததை சிலப்பதிகாரம் சுட்டிக் காட்டுகிறது. அன்று அதனைக் கடல்கோள் என்கிறோம்.
பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள.
என்று பண்டைய ஆழிப்பேரலையைப் பற்றி இளங்கோவடிகள் கூறுகிறார். தமிழ்ச் சங்கங்கள் காவிரிப் பூம்பட்டினம், கடல் மல்லை போன்றன அழிவுக்குக் காரணம் ஆழிப்பேரலையேயாகும்.
தோற்றம்:-
பூமியின் மேற்பரப்பில் பூமியதிர்ச்சியும் எரிமலையும் தோன்றுவது போலவே கடலுக்கு அடியிலும் தோன்றுவது உண்டு. அப்போது ஏற்படும் நீரின் சுழற்சியால் அலைகள் பேருருக் கொண்டு எழுந்து கரையைத் தாக்குகின்றன. இதுவே ஆழிப் பேரலையாகும். இதனை சுனாமி என்ற சப்பானியச் சொல்லால் குறிப்பிடுகிறார்கள்
ஆழிப்பேரலை அழிவுகள்:-
தமிழகக் கடற்கரையிலும், அந்தமான், இலங்கைத் தீவுகளிலும் ஏற்பட்ட இழப்புகள் சொல்லி மாளாது. ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து நீரில் மிதந்தார்கள். மீனவர்களின் படகுகள், கட்டு மரங்கள், அனைத்தும் சின்னா பின்னமாய் நொறுங்கின. கடற்கரையோடு வீடுகள் தரைமட்டம் ஆயின. பெற்ற பிள்ளைகளையும், கணவரையும், பெற்றோரையும் உற்றோரையும் இழந்த மக்கள் கதறிய கதறல் நெஞ்சைப் பிளப்பதாக இருந்தது.
முன்னறிவிப்பு:-
மேலை நாடுகளில் இத்தகைய அழிவுகளுக்கு முன் எச்சரிக்கை செய்யும் அமைப்புகள் உண்டு. நம் நாட்டில் அத்தகைய அழிவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என உணர்ந்த புவியியலார் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யத் தவறிவிட்டனர். அதன் விளைவால் ஆழிப் பேரலைகளின் கோரதாண்டவத்தை மக்கள் அனுபவித்தார்கள்.
முதலுதவி:-
ஆழிப்பேரலையின் அழிவைக் கண்டதும் பொதுமக்களும், தொண்டு நிறுவனங்களும், அரசாங்கமும் போர்க்கால அடிப்படையில் மக்களுக்கு உதவ முன் வந்தார்கள். இறந்த சடலங்களைப் புதைப்பது, நோய் ஏற்படா வண்ணம் மக்களைப் பாதுகாப்பது, வீடு இழந்தவர்களுக்கு உண்ண உணவும் தற்காலிக ஏற்பாடுகளும், மருந்து மாத்திரைகள் உடனடியாக வழங்குவது போன்றன போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன. எனினும், மக்களுக்குக் கிடைத்த உதவிகள் கடலில் கரைந்த காயம் போலதான் இருந்தன.
நிரந்தர உதவிகள்:-
அரசாங்கம் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் கட்டித் தரவும், படகுகள் இழந்தவர்களுக்கு புதிய படகுகள் அமைத்துக் கொள்ளவும் அவரவர் தகுதிக்குத் தகுந்தபடி இலவசமாகவும், குறுகிய காலக் கடனாகவும் பொருள் வழங்கியது. மாணவர்களுக்குப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. பள்ளிக்கூடங்கள் புதிதாகக் கட்டப்பட்டன. அவர்கள் துன்பம் கருதி அரசுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன.
மக்கள் மனம்:-
இப்பேரழிவு கல்மனத்தையும் கரையச் செய்து பொதுமக்களும், அரசு அலுவலர்களும், தொழில் முனைவோர்களும், பிறநாட்டு மக்களும் ஆழிப்பேரவையால் துன்புற்ற மக்களுக்கு வாரி வாரி வழங்கினார்கள். அவர்கள் பெற்ற துன்பத்தைத் தாம் பெற்றதாகவே கருதி உழைத்தார்கள்.
முடிவுரை:-
இத்தகைய கொடுமை இனியும் நிகழா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களைக் காப்பது அனைவரது கடமையாகும்.
நன்றி!
முன்னுரை:-
நாட்டின் பொருளாதார செயல்பாட்டில் விவசாயத்திற்கு அடுத்து மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்பினை வழங்கும் தொழிலாக கைத்தறித் தொழில் விளங்கி வருகிறது. அத்தகைய கைத்தறி பற்றியும் அதன் சிறப்பையும் இக்கட்டுரையில் காண்போம்.
கைத்தறியின் சிறப்பு:-
நம் நாடு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நெசவுத்தொழிலில் பல நுட்பங்களை புகுத்தி, உற்பத்தியில் தலைசிறந்து விளங்கி, உள்நாட்டு விற்பனை போக வெளிநாடுகளுக்கும் கைத்தறி ஆடைகளை ஏற்றுமதி செய்து வந்தது.
தமிழகத்தில் காஞ்சிபுரம், திருபுவனம், ஆரணி, சின்னாளப்பட்டி, மதுரை, சத்தியமங்கலம், பவானி, கோயம்புத்தூர், சென்னிமலை போன்ற பல பகுதிகளில் கைத்தறி நெசவு கொடிகட்டி பறந்து கொண்டு இருக்கிறது.
நாடு முழுவதும் உள்ள கைத்தறி நெசவாளர்களின் வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் கைவினைத்திறனைக் கொண்டாடுவதற்காக இந்தியாவில் தேசிய கைத்தறி தினமாக ஆகஸ்ட் 7-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
கலாச்சார பராம்பரியம் :-
நாம் அணியும் ஆடைகளே நமக்கு அடையாளம் தருகின்றன. நமது கலாச்சாரத்தைச் சொல்கின்றன. நாம் அணியும் ஒவ்வொரு
ஆடையும் பல நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தை கொண்டுள்ளது. அவை மனிதனின் படைப்பாற்றலுக்கும் திறமைக்கும் சான்றாகும். சுபகாரியங்கள் போன்ற முக்கிய விழாக்களின் போது பாரம்பரிய உடைகளை அணிவது நமது வழக்கம். திருமண நிகழ்வுகளில் இன்றியமையாத ஆடையாக விளங்குவது பட்டுத் துணியாகும். தறி கொண்டு கைகளால் நெசவு செய்யப்படும் பட்டுப்புடவையே மணப்பெண்ணுக்கு அணிவது வழக்கம் . இது தூய்மை மற்றும் மங்கள கரமான தன்மையைக் குறிக்கிறது.
பிரபஞ்சக் கலை:-
மனிதனின் அடிப்படை தேவைகளாக உணவு, உடை, இருப்பிடம் உள்ளது. பிறந்த மேனியாக திரிந்த மனிதன் முதலில் இலை தளைகளை வைத்து தனது உடலை மறைக்கத் தொடங்கினான், அதன் பின்னர் பருத்தியைக் கண்டறிந்தான், அதில் இருந்து ஆடையை உருவாகும் நுட்பத்தைக் கண்டறிந்ததால் பருத்தியை இளையாக்கி அதன் பின்னர் அதில் இருந்து ஆடைகள் செய்யத் தொடங்கினான். பின்னர் அதற்கு ஒரு இயந்திரம் கிடைக்க கைகளால் உருவாக்கும் கைத்தறியை உருவாக்கினான்.
தோன்றிய காலம் முதல் இன்று வரை பராம்பரிய அடையாளமாக விளங்கும் கைத்தறி ஆடைகள் நீடித்து நிலைத்து இருக்கும். கலாச்சாரத்தின் அடையாளமாக உள்ளன. இன்றைய தலைமுறையை கவரும் விதமாக காலத்தின் தேவைக்கு ஏற்ப கைத்தறி ஆடைகள் பல விதமாக உருவாக்கப்பட்டு வருகின்றன.
மாற்றங்கள் பல காண்பினும் தன்னனுள் அன்பையும் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் பிணைத்து அடையாளமாக பல தலைமுறைகள் தாண்டி பெருமைக்கு பெருமை சேர்க்கின்றன கைத்தறி ஆடைகள். அத்தகைய சிறப்பை பெற்ற கைத்தறி ஆடைகளை உருவாக்கும் கைத்தறி கலையை ஒரு பிரபஞ்ச கலை என்று கூறினால் அது மிகையாகாது.
முடிவுரை:-
ஆயிரம் ஆயிரம் கலாச்சாரம் மாற்றம் நடந்திருந்தாலும் இன்றும் அணையா விளக்காய் பாரம்பரியத்தை பறைச்சாற்றி கொண்டு இருப்பது கைத்தறி ஆடைகளே. கைத்தறி ஆடைகளை அணிவோம். நெசவாளர்களைக் காப்போம்.
நன்றி!
முன்னுரை
மனிதரின் உடலில் சிறந்த உறுப்பு 'கண்கள்' என்பது எல்லோரும் அறிந்ததே. கண்ணுடையோர் ஒளி உடையோர் என்பர் சான்றோர். அதுபோல் நம்முடைய உடல் நலமாகவும் சிறப்பாகவும் அமைய இரத்தம் மிக இன்றியமையானது. கண்தானம் மற்றும் ரத்ததானம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
கண்தானம்
கண்ணில்லாதவர்கள் இந்த உலகில் வாழ எத்தனை துன்பப்படுகிறார்கள் என்பது நாம் அறிந்ததே. பிறப்பு முதல் கண்ணில் பார்வை இல்லாதவர்க்கும், நோயினால் கண்பார்வை போனவர்க்கும், விபத்தில் கண்பார்வை இழந்தவர்க்கும் கண்ணொளி தந்து வாழ்வளிக்கும் திட்டமே கண்தானம் ஆகும்.
ஒரு மனிதர் இறந்த சில நிமிடங்களில் அவரது கண்களை எடுத்து பார்வையற்றோர்க்கு பொருத்தி அவருக்கு பார்வை தரமுடியும். அதனால் ஒவ்வொருவரும் தான் இறந்த பின்னர் கண்களை தானம் செய்ய முன்வர வேண்டும். இதற்காக கண்வங்கிகள் செயல்படுகின்றன.
இரத்ததானம்
விபத்துகளில் காயமடைந்தவர்க்கும் அறுவை சிகிச்சையின் போது பாதிக்கப்பட்டவர்க்கும் அதிக இரத்தம் தேவைப்படலரம். அப்போது அவருக்குத் தேவையான ரத்தத்தை அளிப்பதே
இரத்த தானம் ஆகும். ஒரு குறிப்பிட்ட நபருக்கு குறிப்பிட்ட இரத்தமே பொருந்தும். அதனால் ரத்த பரிசோதனை செய்த பிறகே ஒருவரது ரத்தம் நோயாளியின் உடலில் செலுத்தப்படுகிறது.
மருத்துவத் துறையில் பெருமளவில் ரத்தம் தேவைப்படுகிறது. ஒரு மனிதனின் உடலில் ரத்தம் தொடர்ந்து ஊறிய வண்ணமே இருக்கின்றது. அதனால் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறையேனும் இரத்ததானம் செய்வதால் அவரது ஆரோக்கியத்திற்கு எந்தக் குறையும் வராது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இரத்த வங்கிகளில் ரத்தமானது சேமிக்கப்பட்டு வருகின்றது. அது பலவகையில் மருத்துவத்தில் பயன்படுத்தி,பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றது.
நமக்கு ஆபத்து இல்லாமல் பிறருக்கு உதவி செய்யும் வாய்ப்பு இரத்ததானமே ஆகும். அதனால் ஒவ்வொருவரும் தங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்து இரத்ததானம் செய்ய முன் வர வேண்டும்.
முடிவுரை
எவ்வுயிரும் தம்முயிர்தான் என்பதை மனிதர்கள் உணர்ந்து கொண்டால் கண்தானமும் இரத்ததானமும் பெருகும். பிறர்க்கு உதவி செய்ய இயற்கை தந்த வாய்ப்பு இது என்று மனமுவந்து செய்தல் வேண்டும்.