Never Stop Learning
என் ஆருயிர்த் தமிழ் மக்களே! நான் தான் மயில் பேசுகிறேன். பாரதத் துணைக் கண்டத்தின் தேசிய பறவையாம் என்னைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா? கூறுகிறேன். கவனமாக கேளுங்கள்.
பறவைகளில் நான் தான் அழகு. கருமையும், நீலமும், பசுமையும், பொன்மையும் கலந்த நிறத் தோகையோடும், நீண்ட கழுத்தோடும், குச்சிக் கால்களோடும் காட்டுப் பகுதிகளில் காட்சி அளிக்கும் என்னைக் கண்டு வியப்படையாதார் யார்? குறிஞ்சி நிலக் கடவுள் முருகனே என் அழகில் மயங்கி என்னை வாகனமாக ஏற்றுக் கொண்டார், என்றால் என் பெருமைக்கு அளவு ஏது? நீங்களே சொல்லுங்கள் பார்க்கலாம்.
மலையும், மலை சார்ந்த இடமுமாகிய குறிஞ்சி தான் என் பிறப்பிடம். காடும் காடு சார்ந்த பகுதியாகிய முல்லையிலும் நான் காணப்படுவேன். மரங்கள் அடர்ந்த பகுதி என்றாலே எனக்கு விருப்பம் மிகுதி. நான் மலேசியா, பர்மா, இலங்கை . சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழ்கிறேன், என்றாலும் எனக்குப் பிடித்தமான நாடு நம் பாரதத் திருநாடு தான்.
நான் தானியங்கள், பழங்கள் உண்டு வாழ்ந்து வருகிறேன். சில சமயங்களில் புழு பூச்சிகள் உண்பதும் உண்டு. பாம்பைக் கூட சில சமயம். தின்றுவிடுவேன். ஆனாலும் எனக்குப் பயம் உணர்வு சற்று அதிகம் தான். எனக்குப் பார்வைக் கூர்மை அதிகம் உண்டு. விரைவாக ஓடும் எங்களால் மற்ற பறவைகளைப் போல வான் வெளியில் பறக்க இயலாது. கருமேகத்தைக் கண்டால் என் மனம் மகிழும் தோகையை விரித்து ஆடுவேன். என்னுடைய குரல் 'அகவல்' கேட்பதற்கு இனிமையாக இராது. என் இனத்தில் பெண்களுக்கு தோகை கிடையாது.
நான் அழகாக இருப்பதால் என்னைப் பலரும் விரும்பி வளர்க்கிறார்கள், பண்டைக் காலத்தில் என் தோகை முனையை எழுதுகோலாகப் பயன்படுத்தினார்கள். தோகையை படைக்கலங்க-ளோடு சேர்த்து வைத்துக் கட்டி எனக்குப் பெருமை தந்தார்கள். சமணத் துறவிமார் என்னை விசிறியாகப் பயன்படுத்துகிறார்கள். என் இறக்கையை எரித்து மருந்தாகப் பயன்படுத்துகிறார். என்னையே கொன்று எண்ணெயில் காய்ச்சி வாத நோய்க்கும் பயன்படுத்துகிறார்கள். என் இனம் அழிந்து கொண்டே வருகிறது அழியாமல் காப்பது உங்கள் கடமை.
நன்றி!
வணக்கம். நான் காகிதம். கப்பல் விடுவது என்றாலும் நான் வேண்டும் கப்பல் வாங்குவது என்றாலும் நான் வேண்டும். அத்தகைய இன்றியமையாத பொருளாக மனித வாழ்க்கையில் நான் மாறிவிட்டேன்.
எனக்கு பல ஆயிரம் ஆண்டுகளாக ஆன வரலாறு உண்டு. என் பயணம் சீனாவில் தொடங்கி உலகம் எங்கும் பரவி, பல மாற்றங்கள் கண்டு இப்பொழுது மனித குலத்தின் தவிர்க்க முடியாத பொருளாக மாறியுள்ளேன்.
என்னை உருவாக்குவதற்கு முன்பு மக்கள் பாறைகள், தகடுகள், ஓலைகள் போன்ற சிரமமான பொருட்களைப் பயன்படுத்தி தங்கள் எண்ணங்களைப் பதிவு செய்தனர். கி.பி 105 ஆம் ஆண்டில் சீனாவை சேர்ந்த சாய்லுன் என்பவர் என்னை கண்டுப்பிடித்தார். என் கண்டுபிடிப்பு மனிதர்களின் தொடர்புகளை, வரலாற்று பதிவுகளை மற்றும் அறிவைப் பகிர்வதை முற்றிலும் மாற்றியது.
15 ஆம் நூற்றாண்டு என் வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்பம் கொண்டது. அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் என்னுடைய தேவை அதிகமானது. பின்பு 17 ஆம் நூற்றாண்டில் பத்திரிக்கை உருவானதிலும் எனக்கு மிக முக்கிய பங்கு இருந்தது. என்னால் மக்களுக்கு உள்ளூர் மற்றும் உலக நிகழ்வுகளைப் பற்றி தகவல்களை தெரிவிக்க முடிந்தது.
காலங்கள் மாற மாற என்னை உருவாக்கும் முறைகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருந்தது. மரத்தின் கூழ் முக்கிய பொருளாக கொண்டு நான் தயாரிக்கபடுகிறேன். என்னை பயன்படுத்திய பிறகும் மறுசுழற்சி செய்து புதிதாக உருவாக்கப்படுகிறேன். என் சிறப்புகள் விரைவில் தெளிவானது. நான் மலிவானதாகவும், எழுத எளிதானதாகவும் மற்றும் பெரிய அளவில் தயாரிக்க சுலபமாகவும் இருக்கிறேன்.
நான் இப்போது அன்றாட வாழ்க்கையில் முக்கிய அங்கமாக மாறினேன். புத்தகங்கள், செய்திதாள்கள், பள்ளிப் புத்தகங்கள் குறிப்பேடுகள், ரூபாய் தாள்கள், பொருட்களை வைக்க காகித பைகள் எனப் பல தேவைகளுக்கு மக்கள் என்னை உபயோகிக்கிறார்கள். குடிப்பதற்கும், பொருள்களை அடைப்பதற்கும் கூட என்னைப் பயன்படுத்துகின்றனர். உண்ணுவதற்கு உடையாத தட்டாகப் பயன்படுகிறேன். நெகிழிக்கு மாற்றாக என் வடிவில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தி நாம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம்.
டிஜிட்டல் யுகம் உருவான பிறகும் காகிதத்தின் முக்கியத்துவம் குறையவில்லை. தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட நவீன காலத்திலும் என் பயன்பாடு ஆண்டுக்கு ஆண்டு 5% அதிகரிக்கப்படுகிறது. கல்வி, வணிகம், கலை, தகவல்தொடர்பு போன்ற பல துறைகளில் மிகப் பெரிய பங்களிப்பை நான் வழங்குகிறேன்.
என்னுடைய உற்பத்திக்கு மரங்கள் வெட்டப்படுவதும் என்னை உருவாக்கும் இயந்திரங்களால் வெளியேறும் புகையும் கழிவுகளும் சுற்றுச்சூழலை மாசுப்படுத்துகிறது. அதனால் சவால்களைப் புரிந்து கொண்டு என்னை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
என்னை போற்றும் வகையில் தேசிய அளவிலான காகிதம் தினம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. என்னை உபயோகிக்கும் ஒவ்வொருவரும் என் தாயான மரங்கள் பல நடுங்கள் என்று வேண்டுகிறேன்.
நன்றி!